உலக வரலாற்றின் போக்கையே மாற்றிய 1917ல் நடைபெற்ற லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. ரஷ்யாவைப் போல் இந்தியாவிலும் புரட்சி நடத்திட வேண்டும் என்று புரட்சியாளர்கள் மத்தியில் உத்வேகம் பரவிய போது கருவிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்துவிட பிரிட்டிஷ் அரசு அடக்குமுறையைத் தொடுத்தது. இதனால் தான் இந்தியப் புரட்சியாளர்கள் தாஷ்கண்ட் நகருக்கு சென்று (சோவியத் யூனியன்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை துவங்கினார்கள். கட்சி துவக்கப்பட்டாலும் பகிரங்கமாக செயல்பட முடியவில்லை. தொடர்ந்து அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் நீதிமன்ற விசாரணையின் போது சந்திக்கக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவாதித்து, 1931 ஆம் ஆண்டு ஒரு திட்டத்தைத் தயாரித்து வெளியிட்டார்கள். இதில் முக்கியமான அம்சம் என்பது நிலப் பிரச்சனை.
“ஆங்கிலேயர்களுடைய, நிலப்பிரபுக்களுடைய, மன்னர்களுடைய நிலங்களை நட்ட ஈடு கொடுக்காமல் கைப்பற்றி நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும்.” நிலப்பிரபுத்துவச் சுரண்டலில் இருந்து, விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளிகளையும் விடுவிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், “விவசாயப் புரட்சி இந்தியப் புரட்சியின் அச்சாணி”, என்பது கம்யூனிஸ்ட் கட்சி திட்டத்தின் முக்கியமான அம்சம். இதனடிப்படையில் தான், எதிர்காலத்தில் நாட்டில் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி நிலத்திற்காகப் பல போராட்டங்களை நடத்தியது.
தெலுங்கானா புரட்சி...
கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தெலுங்கானா புரட்சி (1946-1951) இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வீரம்செறிந்த அத்தியாயம். நிசாம் மன்னரை எதிர்த்து விடுதலைக்காக நடைபெற்ற ஆயுதந்தாங்கிய போராட்டத்தில், 3000 கிராமங்களை விடுவித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத்தை உருவாக்கியது. மேலும் நிலச்சுவான்தாரர்களிடமிருந்து 10 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்தது. இருப்பினும் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1951ல், விடுவிக்கப்பட்ட அந்த கிராமங்கள் இந்திய அரசின் ஆளுகைக்குள் வந்ததால், 7 லட்சம் ஏக்கர் நிலங்களை காங்கிரஸ் அரசு மீண்டும் நிலச்சுவான்தாரர்களிடம் ஒப்படைத்தது. எனினும், 3 லட்சம் ஏக்கர் நிலம் குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்குச் சொந்தமானது. இதே போலவே நாடு, முழுவதும் பல மாநிலங்களில் விவசாயிகளின் எழுச்சி நிலத்திற்காக, குத்தகை சாகுபடிதாரர்களுக்காக, விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காக வீரம் செறிந்த பல போராட்டங்களை கண்டது. இத்தகைய போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் அளப்பரிய தியாகம் செய்தார்கள்.
கேரளாவில்...
கேரளம் தனிமாநிலமாக அமைந்த பிறகு 1956ல் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்தது. அதில் “புதிய கேரளம் உருவாக்குவோம்” என்ற பிரகடனத்தை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது. இதில் முக்கியமானது, நில உச்சவரம்பை தீர்மானித்து உபரி நிலத்தை நிலமற்றவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பதுதான்.
1957ஆம் ஆண்டு, ஏப்ரல் 5 ஆம் தேதி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, தோழர் இ.எம்.எஸ் தலைமையில் அமைந்தது. ஆட்சி அமைத்த ஆறாவது நாளில், ஏப்ரல் 11 ஆம் தேதியன்று நில உச்சவரம்பு அவசரச் சட்டத்தில் முதல்வர் இ. எம்.எஸ் கையெழுத்திட்டார். தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நில உச்சவரம்பு சட்டத்தில், உபரி நில விநியோகம், குத்தகை சாகுபடிதாரர்கள் உரிமை பாதுகாப்பு, சொந்த இடமில்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்குவது ஆகிய மூன்று அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. 5 உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு உச்சவரம்பு 15 ஏக்கர். இத்தகைய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக, மாநிலம் முழுவதும் போராட்டத்தைத் தூண்டின. இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி, 1959 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசு, முதல் கம்யூனிஸ்ட் அரசைக் கலைத்தது. 1960 ஆம் ஆண்டில், ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யக்கூடிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இக்காலத்தில் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உபரிநிலத்தை விநியோகம் செய்ய வேண்டும் என்று தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தது. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
நில உச்சவரம்புச் சட்டம்...
1967 ஆம் ஆண்டு, மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சி அமைந்தது. மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு நில உச்சவரம்பு சட்டத்தை நிறைவேற்றியது. இந்த அரசும் காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சியினால் 1969 ஆம் ஆண்டில் கவிழ்க்கப்பட்டது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி ஆதரவோடு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி அச்சுதமேனன் தலைமையில் அமைந்தது. நில உச்சவரம்புச் சட்டத்தை அமலாக்கிட வேண்டும் என்று மாநிலம் முழுவதும் நேரடியாக, நிலத்தில் இறங்கக்கூடிய வலுவான நிலமீட்சிப் போராட்டம் தோழர் ஏ.கே.கோபாலன் தலைமையில் நடந்தது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு, ஈ.கே.நாயனார் தலைமையில் ஏற்பட்டது.
இவ்வாறு 1957 ஆம் ஆண்டு தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல் கேரளத்தில் நிலத்திற்கான போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நிலத்திற்கான போராட்டம் நடத்தியதோடு அரசு நிர்வாக அதிராகத்தைப் பயன்படுத்தி நிலச் சீர்திருத்தம் செய்துள்ளது. சுமார் 10 லட்சம் ஏக்கர் உபரி நிலம் விநியோகம் செய்யப்பட்டது. 28 லட்சம் குத்தகை விவசாயிகளுடைய சாகுபடி சட்டப்படியாக பாதுகாக்கப்பட்டது. 5 லட்சத்து 28 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் தலித் மக்கள். இந்தியாவில் நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து நில விநியோகம் செய்வதில், கம்யூனிஸ்ட் கட்சி முன்மாதிரியாக இருந்துள்ளது.
மேற்கு வங்கத்தில்...
மேற்கு வங்கத்தில் 1960களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குத்தகை விவசாயிகளின் சாகுபடியைப் பாதுகாக்கவும், நிலத்திற்காகவும் போராட்டத்தைத் துவங்கியது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான விவசாயிகள் சங்கம் நேரடியாக நிலத்தில் இறங்கும் போராட்டத்தை நடத்தியது; காவல்துறை தலையீட்டையும் மீறி விவசாயத் தொழிலாளர்கள் உபரி நிலத்தில் வெற்றிகரமாக சாகுபடி செய்தார்கள். இத்தகைய போராட்டத்தில் நிலச்சுவான்தாரர்களின் குண்டர்கள் மற்றும் காவல்துறையின் தாக்குதலால் பலர் கொல்லப்பட்டனர். 1977ஆம் ஆண்டு ஜோதிபாசு தலைமையில் இடது முன்னணி ஆட்சி அமைந்த பிறகு புதிய நில உச்சவரம்பு சட்டமும், குத்தகை விவசாயிகள் பதிவுச் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகள் சங்கம் உபரி நிலத்தை அடையாளம் கண்டு, விவசாயத் தொழிலாளர்கள் சாகுபடி செய்ய ஏற்பாடு செய்தது. மேலும், அரசு நிர்வாகமும், உபரி நிலத்தைக் கையகப்படுத்தி, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்திட உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் இடது முன்னணி ஆட்சி நீடித்ததால், இந்தியாவிலேயே உபரி நிலம் அதிகமாக விநியோகம் செய்த மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. குத்தகை விவசாயிகளை நிலச்சுவான்தாரர்கள் நினைத்தால், அவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தில் இருந்து வெளியேற்றலாம் எனும் நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் சாகுபடி பதிவு செய்யப்பட்டது. 2010 ஆம் ஆண்டு வரை, 15 லட்சம் ஏக்கர் நிலத்தை சாகுபடி செய்து வந்த, குத்தகை விவசாயிகளின் சாகுபடி உரிமை பதிவு செய்யப்பட்டது. 12 லட்சம் ஏக்கர் உபரி நிலம் 29,71,853 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் சாகுபடிக்கு தகுதியுள்ள மொத்த நிலங்களில் 3.5 சதவிகிதமே மேற்கு வங்கத்தில் உள்ளது. ஆனால், நாட்டில் விநியோகம் செய்யப்பட்ட மொத்த உபரி நிலத்தில் 22.6 சதவிகிதம் மேற்கு வங்கத்தில் இருந்து மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்குவங்க மாநில மக்கள் தொகையில், தலித் மற்றும் பழங்குடியைச் சார்ந்தவர்கள் 30 சதவிகிதம். ஆனால், உபரி நிலம் பெற்ற பயனாளிகளில் தலித் மக்கள் மற்றும் பழங்குடிப் பகுதிகளைச் சார்ந்தவர்கள் 55 சதவிகிதம்.
நாட்டிலேயே அதிகமான உபரி நிலம் விநியோகம் செய்யப்பட்டதும், தலித் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களுடைய மக்கள் தொகை சதவிகிதத்தைவிட கூடுதலாக நிலம் விநியோகம் செய்யப்பட்டதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில் இருந்த மேற்கு வங்கத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. திரிபுரா மாநிலத்தில், நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளுடன் கூடுதலாக பழங்குடி மக்கள் உரிமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது.
தமிழகத்தில் நிலத்திற்கான போராட்டம்...
தமிழகத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு 1942ல் அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டத்திலேயே, தஞ்சை மாவட்ட விவசாயிகளைத் திரட்டுவதற்கு முடிவெடுத்து தோழர் பி. சீனிவாசராவ் அந்த மாவட்டத்துக்குச் சென்றார். மாநிலத்திலேயே நிலக்குவியல் அதிகமாக இருந்த மாவட்டம் தஞ்சை மாவட்டம். தீண்டாமைக் கொடுமையும் கொடூரமான வடிவத்தில் அங்கு நிலவியது. நிலச்சுவான்தாரர்களின் சுரண்டலுக்கு எதிராகவும், தீண்டாமைக் கொடுமை உள்ளிட்ட பண்ணை அடிமை முறை ஒழிப்புக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் போராடியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து நடத்திய போராட்டங்களினால் 1952 ஆம் ஆண்டு பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டதோடு, குத்தகை விவசாயிகளின் சாகுபடியைப் பாதுகாத்திட மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது.
1961 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான விவசாயிகள் சங்கம், கேரளத்தைப் போல தமிழகத்திலும், நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வந்து, உபரி நிலம் விநியோகம் செய்திட வலியுறுத்தி, மாநில அளவில் மறியல் போராட்டம் நடத்தியது. காங்கிரஸ் அரசு நில உச்சவரம்பு 30 ஸ்டாண்டர்ட் ஏக்கர்கள் என்று நிர்ணயித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடியதன் விளைவாக, 1967 ஆம் ஆண்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, உச்சவரம்பு 15 ஏக்கர் என நிர்ணயித்து சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், நில விநியோகம் நடைபெறவில்லை.
நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உபரி நில விநியோகத்துக்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாகப் போராடி, பல தியாகங்களைச் செய்தது. இத்தகைய போராட்டங்களில் உபரி நிலத்தையும் அடையாளம் கண்டு அந்த நிலத்தை சாகுபடி செய்து வரக்கூடிய நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கே விநியோகம் செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. இத்தகைய போராட்டத்தின் விளைவாக, சுமார் 3 லட்சம் ஏக்கர் (நாகை திருவாரூர் மாவட்டங்களில்) உபரிநிலம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதிகாரத்துக்கு வராமலேயே, போராட்டத்தின் மூலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நிலச்சீர்திருத்தத்துக்காகப் போராடி, அரசு உபரி நிலத்தை விநியோகம் செய்யும் நிர்பந்தத்தை உருவாக்கியது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் விளைவாக, ஒரு லட்சத்து 80 ஆயிரம் தலித் குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா கிடைத்தது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் ஜமீன்தாரர்களுக்கு, மிராசுதாரர்களுக்கு எதிராக ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியும், பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் நிலத்திற்காகவும், விவசாயத் தொழிலாளர்களின் கூலி உயர்வுக்காகவும், குத்தகை விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் ஏராளமான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டுள்ளது.
இந்தியாவில் நிலத்திற்கான போராட்டம் என்பது பெருமளவில் தொடர்ச்சியாக நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் திட்டத்தில் இதன் முக்கியத்துவம் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது. “கிராமப்புறங்களில் 70 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்ததாகும். விவசாயத் துறை வளர்ச்சியும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் விரிவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.”
இப்பின்னணியில் இந்தியாவின் கிராமப்புறங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய நிலச்சுவான்தாரர்களின் நிலக்குவியலை எதிர்த்து, நிலவிநியோகத்திற்காக தொடர்ந்து போராட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான திட்டம் வழிகாட்டுகிறது.
பண்ணை அடிமைத்தனத்தை எதிர்த்த கீழத்தஞ்சை மண்ணின் மகத்தான நில உரிமை வர்க்கப் போராட்டம் எனும் மாபெரும் காவியத்தை விளக்கும் ஓவியம்.
நன்றி: ஓவியர் கோ. ராமமூர்த்தி